தங்களுடைய கருத்தை வெளியிடுவதற்கான அனைத்து சுதந்திரமும் உள்ளது - ஜெகதீப் தன்கர்

தங்களுடைய கருத்தை வெளியிடுவதற்கான அனைத்து சுதந்திரமும் உள்ளது - ஜெகதீப் தன்கர்

சென்னை ஐஐடி வளாகம்

தமிழ்நாட்டிற்கு பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழ்நாடு வந்த இந்திய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சென்னை ஐஐடி வளாகத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட புத்தாக்க வசதி மையத்தினை திறந்து வைத்தார். சங்கர்  மற்றும் சுதா புத்தாக்க மையம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில், முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் புதிய கண்டுபிடிப்புகள் புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு சென்னை ஐஐடிகள் படித்த முன்னாள் மாணவரும் தொழில் நிறுவனமான சங்கர் இம்மையம் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 


நிகழ்ச்சியில் துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஆற்றிய சிறப்புரை:

 1989ல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது 30 கட்சிகள் 30 வருடமாக கூட்டணி கட்சிகளாகவே அரசை நடத்தி வந்தனர். 2014 ல் அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 2019 ல் வளர்ச்சிக்கான அடித்தளம் கிடைத்தது. இதன் விளைவாக நாட்டின் வலுவான நிதிநிலை அறிக்கையை நம்மால் தயாரிக்க முடிந்துள்ளது.

இந்தியா புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் சிறந்த நாடாக மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.  விரைவில் முதல் இடத்தை பிடிக்கும். இதில் நாடு முழுவதும் சமநிலையை கொண்டு வர வேண்டும். சென்னை ஐஐடியில் மட்டுமே 300 புத்தொழில் நிறுவனங்கள் 40 ஆயிரம் கோடி நிதிப்பங்களிப்பில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை இடங்களை இந்தியர்கள் வகிக்கின்றனர். 2047ல் இங்குள்ள மாணவர் பலர் முக்கிய இடங்களில் இருப்பீர்கள். மனித வளத்தில் இந்தியர்களின் சிறந்த சிந்தனை மற்றும் ஆற்றல் திறன் உலகை வழி நடத்தும்.

220 கோடி கோவிட் தடுப்பூசிகள் 

220 கோடி கோவிட் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். கோவிட்-19 வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அனைவருக்கும் கோவிட் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கியுள்ளிம்  பல நாடுகளில் இன்னும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

நான் மாநிலங்களவையின் தலைவராக இருக்கின்றேன். அந்த அவையை கலைக்க முடியாது என்பது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நம்முடைய முன்னோர்கள் அவையை எந்த பிரச்சினைகளும் இல்லாமல் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது விவாதங்கள் இல்லாமல் கூச்சல் குழப்பம் நிலவுவது ஆச்சரியம் அளிக்கிறது. 

சமூக வலைதளங்களில் கொண்டு சேருங்கள் 

வரி செலுத்துபவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரியில் பாராளுமன்றம் இயங்குகிறது.  இதுபோன்று அவையில் நடப்பதை, மாணவர்கள் சமூக வலைதளங்களில் எடுத்துச் சென்று மக்களிடம் கொண்டு சேருங்கள். உங்களைப் போன்ற இளம் தலைமுறையினரின் ஆதரவு எனக்கிருந்தால், இது பெரும் இயக்கமாக மாறும். அப்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியவரும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவருடைய நடவடிக்கைகளாலோ அல்லது வார்த்தையிலோ தவறான விஷயங்களை குறிப்பிடும் பொழுது அதை வழக்காகக்கூட நீதிமன்றத்தில் கொண்டு செல்ல இயலாது. இது  பொறுப்பற்ற செயல்களுக்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளாமல்  இது 140 கோடி மக்களின் இறையாண்மை என கருத வேண்டும்.

ஆதாரமும் பொறுப்பும் தேவை

ஒரு உறுப்பினர் பாராளுமன்றத்தில் ஒரு விஷயம் குறித்து பேசும்போது அதற்கான ஆதாரமும் பொறுப்பும் தேவை. அது தவறானால் பாராளுமன்ற விதிமீறல் படி நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. ஒருவர் தங்களுடைய கருத்தை வெளியிடுவதற்கான அனைத்து சுதந்திரமும் உள்ளது ஆனால் நமது நாட்டின் உயர்ந்த அமைப்பான,  நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்பு, 20 ஆண்டுகள் கழித்து அந்த விவகாரத்தில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விருப்பப்பட்டது போல் மாற்றி திரித்து வெளியிடுவது அரசியல் லாபத்திற்கான செயல், என பிபிசியை விமர்சித்து பேசினார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com