நீட் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது என சட்டப்பேரவையில் சுட்டிக் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளில், சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும், கனவுகளையும் நீட் தேர்வு தகர்த்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.
கட்டாயமாக எதிர்கொள்ளும் இந்த கூடுதல் தேர்வான நீட், சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளதாகவும் சிறப்பு பயிற்சி பெறும் வாய்ப்புள்ள சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெறும் வகுப்பினரை ஆதரித்து, சமத்துவமின்மையை நீட் தேர்வு வளர்ப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலை நிறுத்தவும், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும், சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளதாக, கூறி, அந்த சட்டமசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார். உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற இந்த மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.