சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு!

சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு!

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப் படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி,அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலம் கையகப் படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும்  விவசாயமும் பாதிக்கப்படும் என கூறி அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் பொது மக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  வளையப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள்  என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது  சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும், தங்களது வாழ்வாதாரங்களை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் மோகனூர் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com