கோவை மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை.,காரணம் என்ன.? 

கோவை மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை.,காரணம் என்ன.? 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட இடங்களில் உள்ள அணை பகுதிகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக அங்கிருந்து திறந்து விடப்பட்ட நீர், கெத்தை நீர் மின் நிலையம்  வழியாக பில்லூர் அணைக்கு வந்த வண்ணம் உள்ளது. 

இதனிடையே கேரளா மாநிலத்தில் பெய்து வரும் மழைக்காரணமாக அங்கிருந்தும் பில்லூர் அணைக்கு நீர் வருகிறது. இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை நிரம்ப தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையிலிருந்து 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில், கரையோர பகுதி மக்கள் பவானி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கையாக 6 திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com