திமுக பதவி ஏற்றதில் இருந்து தமிழகம் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையும் செய்யவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அவரவர் வீடுகளில் முன்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது .சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன, போராட்டத்தின்போது அரசை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி போராட்டம் நடத்தினார்.
போராட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இதுநாள்வரை செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார். மேலும் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும் டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று சொன்னதை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை என்றும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் டிடிவி தினகரன் நேற்று அதிமுகவை மீட்டெடுப்பதற்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து செய்யும் என்று சொல்லி இருந்ததை தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர்கள். கட்சியை மீட்டு எடுப்பதெல்லாம் நடக்குமா என்றும் கேள்வி எழுப்பினார் கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்கவே நடக்காது என்று கூறினார்.