46 மாணவ, மாணவியருக்கு தொற்று... கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்...

தனியார் நர்சிங் கல்லூரியில் 46 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவையில் 15 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

46 மாணவ, மாணவியருக்கு தொற்று... கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்...

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 600க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 226 பேருக்கும், கோவையில் 224 பேருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், தொற்று பாதித்தவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில், கோவையில் மேலும் 15 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் ஆகியவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அனைத்து மால்கள், நகைகடைகள், துணிகடைகள் உள்ளிட்ட இதர கடை ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் பார்சல் சேவைக்காக மட்டுமே இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உழவர் சந்தைகள் 50 சதவீத கடைகளுடன் சுழற்சி முறையில் இயங்கவும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வராமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சி மாட்டு சந்தை, உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவையில் இந்த கூடுதல் கட்டுப்பாடுகள் வரும் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.