ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மீண்டும் மீண்டும் வகுப்பெடுக்கும் முரசொலி!!!

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மீண்டும் மீண்டும் வகுப்பெடுக்கும் முரசொலி!!!

திராவிடத்தின் புதிய ஆய்வாளர்களில் ஒருவராக தன்னைப் பதிவு செய்து கொண்டு தனது அரைகுறை ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்தி வருகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள். அவருக்கு இந்தப் பிரச்சினையின் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.

திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இடத்தின் பெயராக - இனத்தின் பெயராக - மொழியின் பெயராக -வழங்கப்பட்டு வந்திருந்தாலும் இன்று திராவிடம் என்றால் அது ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது. அதனைத்தான் 'திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம்' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். சொல்லில் மட்டுமல்ல: செயலிலும் காட்டி வருகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள்...

“நாட்டிலே திராவிடச் சமுதாயத்துக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளும், அக்கிரமங்களும் யாரையும் எளிதிலே ஆத்திரமூட்டக் கூடியவனவாகவே உள்ளன. நாடாண்ட சமுதாயம், இன்று, நாலாம் ஜாதி, ஐந்தாம் ஜாதி என்ற இழிநிலையில் வைக்கப்பட்டுப் பாழ்படுத்தப்படுகிறது. பண்புகள் பரிகசிக் கப்பட்டு, நிலைகுலைக்கப்பட்டு, திராவிடச் சமுதாயம் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. அரசியல் துறையிலே அடிமை களாக்கப்பட்டு, திராவிடர்கள், அவதிக்குள்ளாக்கப் படுகின்றனர். பொருளாதாரத் துறையிலே திராவிடப் பெருங்குடி மக்கள் தரித்திரர்களாக நலிகிறார்கள். சொந்த நாட்டினின்றும் துரத்தியடிக்கப்பட்டு ஒரு கவளம் சோற்றுக்காக, வேற்று நாடுகள் சென்று, மானமிழந்து, மரியாதை இழந்து, அந்த நாடுகளின் அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டு, அவதியுறுகிறார்கள்.


இந்தக் கொடுமைகளை நிரந்தரமாக்கிவிடும் பயங்கர முயற்சியும் இடைவிடாது நடைபெறுகிறது. அந்த நிலையில் திராவிட மக்கள் சட்டங் களை மீறியும் பலாத்காரத்திற்கு உட்பட்டும் செயல்பல புரிவதைத் தடுத்து நிறுத்தி அமைதியும், அறிவும் கொண்டதும், கண்ணியமும். கட்டுப்பாடும் நிரம்பியதும் ஆன நடவடிக்கைகளில் திராவிட முன்னேற்றக் கழகம், ஈடு பட்டுச் செயல்பட்டு வருகிறது. ஏனென்றால், சட்டத்தின் மாண்பை மதிப்பது கோழைத்தனமல்ல என்று தி.மு.கழகம் மனதார நம்புகிறது” (நம்நாடு 17-8-1952) என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள். இத்தகைய திராவிட சமுதாயத்தை மீட்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் உருவாக்கப்பட்டது. அரசியல் களத்தில் போராடியது. வாதாடியது. தேர்தலின் மூலமாக வென்று சட்டமன்றத்துக்குச் சென்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கனவுகள் என்பவை தமிழ்ச் சமுதாயத்தின் கனவுகளாக இருந்ததால்தான் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை நாட்டு மக்கள் அக்கட்சிக்கு வழங்கினார்கள். ஆறாவது முறையாக ஆட்சியை அமைத்து இன்று தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம்.

திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, “நாம் முதன்முதலாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் நமது தாய்க் கழகமாம் நீதிக்கட்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது. நாம் நீதிக்கட்சியின் தொடர்ச்சி, நீட்சி” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன் னார்கள். ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' என்று தொடக்கத்தில் பெயர் சூட்டினாலும் பிற்காலத்தில் அதுதான் திராவிடர் கழகமாக பெயர் சூட்டிக் கொண்டது. அந்த வகையில் திராவிட இயக்கக் கொள்கை மரபு என்பது 100 ஆண்டுகளைக் கடந்ததாக உள்ளது.

100 ஆண்டுகள் கழித்து வந்து, 'திராவிடமா அப்படின்னா என்ன?' என்று கேட்கிறார் ஆளுநர். “திராவிட மாடல் அரசை அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். முதலில் அப்படியொரு நிர்வாகமே கிடையாது. திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் முழக்கம்தான். ஒரே பாரதம் - ஒரே இந்தியா என்ற கொள்கையை ஏற்காத மற்றும் காலாவதியான கோட் பாட்டை தூக்கிப் பிடிக்கும் வெற்று முயற்சி இது” – என்று சொல்லி இருக்கிறார் ஆளுநர்.சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - மதச் சார்பின்மை - கூட்டாட்சித் தத்துவம் - அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் - அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமஉரிமை - ஆகியவைதான் திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம் ஆகும் என்று முதலமைச்சர் சொல்லி வருவது ஆளுநருக்குப் புரிய வில்லையா?

“தந்தை பெரியார் காலத்தில் பேசியது சமூக சீர்திருத்தம். நாம் இன்று நடைமுறைப்படுத்தி வருவது சமூக வளர்ச்சி. சீர்திருத்தத்தின் அடுத்த பரிமாணம்தான் இன்றைய கழக அரசு உருவாக்கி வரும் சமூக, அரசியல், பொருளாதார. கல்வி, தொழில் வளர்ச்சியாகும். இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம். ஒரு சீர்திருத்த இயக்கம் ஆட்சிக்கு வந்தால் எத்தகைய கொள்கையை சட்டமாகவும் திட்ட மாகவும் நிறைவேற்றுமோ அவை அனைத்தையும் நிறைவேற்றிக் காட்டிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் அரசும்” என்று முதலமைச்சர் சொல்லி வருவது ஆளுநருக்குப் புரியவில்லையா? இவர் இப்படி பேசப் பேசத்தான் திராவிடப் பண் அதிகமாகப் பாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com