ஸ்டெர்லைட் ஆலை; ஆமை வேகத்தில் ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணி!

ஸ்டெர்லைட் ஆலை; ஆமை வேகத்தில் ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணி!

ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆமைவேகத்தில் நடைபெறும் ஜிப்சம் கழிவுகள் அகற்றும் பணி; கடந்த 31 நாட்களில் 26 ஆயிரம் டன் ஜிப்சம் மட்டுமே அகற்றம்.

தூத்துக்குடியில் கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்தது.


இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக, தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுரேஷ், மாவட்ட தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் சரவணன் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு அவர்கள், ஆலை மற்றும் நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருப்பதையும், அதற்கான கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆலையின் உள்ளே செல்லும் வாகனங்கள், ஆட்கள், ஆலையில் இருந்து வெளியில் வரும் ஆட்கள், வாகனங்கள் மற்றும் அகற்றப்படும் கழிவு பொருட்களின் விவரங்களை 3 பதிவேடுகளில் பராமரிக்க அறிவுறுத்தினர். 

ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜிப்சம் மழையில் நனைந்து இறுகிய நிலையில் காணப்பட்டது. இதனை அகற்றுவதற்கு வசதியாக உடைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி பொக்லைன் உள்ளிட்ட 2 கனரக இயந்திரங்கள் ஆலைக்குள் கொண்டு சென்று தொடர்ந்து 2 நாட்கள் ஜிப்சத்தை உடைக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் கடந்த ஜூன் 23ம் தேதி முதல் ஜிப்சம் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கியது. அகற்றப்பட்ட ஜிப்சம் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் உள்ள இந்தியா சிமெண்ட் தொழிற்சாலைக்கும், விருதுநகர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலைக்கும் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று மட்டும் (ஜூலை 28) 16 லாரிகள் மூலம் 558டன் ஜிப்சம் அகற்றப்பட்டது.


நேற்றுவரை சுமார் 31 நாட்கள் இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 26 ஆயிரம் டன் ஜிப்சம் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. ஆலையில் மொத்தம் 1.5 லட்சம் டன் ஜிப்சம் கழிவுகள் உள்ள நிலையில் இப்பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள நிலவரம் அடிப்படையில் ஆலையில் இருந்து ஜிபசம் கழிவுகள் அகற்றும் பணி இன்னும் பல மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது.
அகற்றப்படும் கழிவுகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக வெளியேற்றப் படுகிறது. இதனால் அந்த வாசலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன் மூலம் கழிவுகள் அகற்றும் பணிகள் கண்காணிக்கப் பட்டுவருகிறது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவனவாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கழிவுகள் அகற்றும் பணி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப் படுவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com