லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன் வந்து மறு ஆய்விற்கு எடுத்த வழக்கின் ஆவணங்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பிடம் வழங்கபட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர் E.V. சந்துரு ஆஜராகி, இந்த வழக்கின் நோட்டீஸ் தங்களுக்கு கிடைத்துவிட்ட நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என கூறினார்.
இதனையடுத்து, வழக்கின் ஆவணங்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், ஆவணங்கள் வழங்கப்பட்டதை அடுத்து நீதிபதி விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.