அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை.... தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த ஸ்டாலின்..! 

அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை.... தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த ஸ்டாலின்..! 

அண்ணா- கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை.... தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த மு.க ஸ்டாலின்..! 

மு.க ஸ்டாலினின் முதல் தேர்தல்; கட்சியின் பதினைந்தாவது தேர்தல்  

திமுகவின் உட்கட்சி பொதுத் தேர்தல் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இது திமுகழகத்தின் பதினைந்தாவது உட்கட்சி தேர்தல் மற்றும் திமுக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் தேர்தல். கடந்த நாட்களில் ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி, பகுதி, மாவட்டம், செயற்குழு மற்றும் பொதுக்குழு தேர்தல் முடிந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக தலைவர் நேரில் ஆய்வு

சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரே செயின்ட் ஜார்ஜ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் லிங்க்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வருகிற அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டமானது நடைபெறவுள்ளது. 

இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள நிலையில், பிரம்மாண்ட பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் அறிய: கழகம் தான் உங்கள் சாதி... தொண்டர்கள் தான் உங்கள் சனம்

உட்கட்சி தேர்தலின் நடைமுறை

திமுக தலைவர், பொதுச்  செயலாளர் மற்றும் பொருளாளருக்காகப் போட்டியிடுவோர் வைப்புத் தொகையாக ரூபாய் 50,000 செலுத்த வேண்டும். இப்பதவிகளுக்கு போட்டியிடுபவர்களை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் முன்மொழிய வேண்டும். 

உடன்பிறப்புகள் விருப்ப மனு 

இதற்கான வேட்பு மனு தாக்கலும் அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதை தவிர கூட்டத்தில்  திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. 

இதனை தொடர்ந்து திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கழகத்தின் உடன்பிறப்புகள் விருப்பம் மனு அளித்துள்ளனர்.

தொண்டர்களின் ஆரவாரத்தோடு மு.க ஸ்டாலின் மனு தாக்கல் 

வரும் 9ஆம் தேதி  தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மனுதாக்கல் செய்தார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிடவுள்ள டி.ஆர்.பாலு மனுதாக்கல் செய்யவுள்ளார்.  துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால், புதிய துணை செயலாளர் ஆகிறார் கனிமொழி கருணாநிதி.

-------- அறிவுமதி அன்பரசன்