35 ஆண்டுகளுக்கு பிறகு...சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்...ஈவிகேஸ் இளங்கோவன்!

35 ஆண்டுகளுக்கு பிறகு...சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்...ஈவிகேஸ் இளங்கோவன்!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைவேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவரோ அண்மையில் உயிரிழந்த நிலையில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கி திமுக அறிவித்தது. 

இரண்டாவது மகனுக்கு கோரிக்கை :

இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்திருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவரது  இரண்டாவது மகனுக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.  கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து சென்னை, சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

இளங்கோவன் போட்டி :

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக  ஈ.வி.கே. எஸ். இளங்கோவனே போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். 

35 ஆண்டுகளுக்கு பிறகு :

1985 ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் மத்திய அமைச்சர், தமிழக காங்கிரஸ் தலைவர் என பொறுப்பு வகித்த ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், 35 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை சேர்ந்த 4 அணிகளும் போட்டியிடாமல் பாஜகவின் வேட்பாளரை நிறுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், அப்படி நேர்ந்தால் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com