நிலவில் உள்ள ஹீலியத்தை கொண்டு வந்து நாம் பயன்படுத்தினால் இந்தியாவிற்கு எரிபொருள் தேவையே இல்லாமல் போகும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், நிலவில் கிடைக்கும் ஹீலியம் 3 என்ற தனிமத்தை அரை டன் கொண்டுவந்தால் இந்தியாவின் ஒரு ஆண்டிற்கான எரிசக்தியை தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். விரைவில் அதற்கான மாற்று உள்ளது என நம்பலாம். அதற்கான வழிமுறைகளை உலகில் எல்லோரும் சேர்ந்து கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவோம். தற்போது உள்ள சர்வதேச விண்வெளி மையமானது உலக நாடுகள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கியது. இப்போது இருக்க கூடிய சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் ஆயுட்காலம் நிறைவடையும் போது நாம் நமது சொந்த நிலவில் இருந்து ஆய்வு மையத்தை அமைக்கலாம். இன்று நிலவை பெரிய அளவில் திரும்பிப்பார்ப்பதற்கான விதையை நாம் விதைத்திருக்கிறோம். அந்த விதை விருட்சமாக வளரும் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: தயார் நிலையில் 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு!