அவதூறு கருத்துக்களை பரப்பும் அண்ணாமலை... உடனடி நடவடிக்கை எடுக்க கி.வீரமணி வலியுறுத்தல்...

திராவிடர் கழகம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து போலீசார் உடையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவதூறு  கருத்துக்களை பரப்பும் அண்ணாமலை... உடனடி நடவடிக்கை எடுக்க கி.வீரமணி வலியுறுத்தல்...

கடந்த வாரம் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்குச் சென்ற போது குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 

முப்படை தலைமை தளபதி மரணம் தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதால் அவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அண்ணாமலை திராவிட கழகத்தின் துணை அமைப்புகள் முப்படை தலைமை தளபதி உயிரிழப்பைக் கொண்டாடியதாகக் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், அண்ணாமலையின் இந்தக் கருத்துக்குத் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் 'விடுதலை' நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம் உண்மை இவ்வாறு இருக்க, 

'திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதாக' தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். பொய்யான கருத்து எங்கு, எப்பொழுது திராவிடர் கழகம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இது பொய்யானது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

திராவிடர் கழகத்தின்மீது பொய்யான வகையில் அபாண்டமாக அவதூறு பரப்பி, மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப்பற்றி மோசமான அபிப்ராயம் உருவாகும் வகையில் செயல்பட்டுள்ளார்.  தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு, 75 ஆண்டுகளுக்குமேல் - மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை எதிர்த்தும், சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற தன்மை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும், செயல் பாடுகளையும் மேற்கொண்டுவரும் அரசியல் சார்பில்லாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின்மீது அவதூறு பரப்பியுள்ள தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும், குறிப்பாகக் காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com