பொங்கல் பரிசுக்கு வருமான வரி; மத்திய நிதி அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு!

பொங்கல் பரிசுக்கு வருமான வரி; மத்திய நிதி அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு!

பொங்கல் பரிசு திட்டத்தில் பயனாளிகளுக்காக வழங்க பெற்ற பணத்துக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து, சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கிகள் பெற்ற தொகையை வருமானமாக  கருதி, 2 சதவீத வரி செலுத்த வேண்டுமென மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உத்தரவிட்டன.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இதில் ஒரு பிரிவு வழக்குகளில், மக்கள் நலத்திட்டத்திற்கு கொடுக்கும் பணத்திற்கு வரி விலக்கு வழங்கக் கோரி தமிழக முதல்வர் மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தின் மீதும்,  தலைமை செயலாளர் தரப்பில் மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கும் அனுப்பிய கடிதம் மீதும்  விரைந்து முடிவெடுக்கும்படி கடந்த மார்ச் 3ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த  நீதிபதி சுரேஷ்குமார், உயர் நீதிமன்றம் மார்ச் 3ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது, தமிழக அரசின் கோரிக்கை உரிய காலத்துக்குள் பரிசீலிக்கப்படும் என வருமான வரித்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

இதைபதிவு செய்துகொண்ட நீதிபதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கிகளுக்கு வருமான வரி விலக்கு வழங்குவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை மீது 6 வாரஙகளில் முடிவெடுக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சகம் மற்றும் நேரடி வரிகள் வாரியத்திற்கும் உத்தரவிட்டு, வழக்குகளை முடித்துவைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com