ஆசிய கோப்பை கிரிக்கெட்; சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில், இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முன்னேறின. கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் திணறியது. முகமது சிராஜின் மின்னல் வேகப் பந்துவீச்சில் அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

இலங்கை அணியில் இரண்டு வீரர்கள் மட்டும் இரட்டை இலக்கை எட்டிய நிலையில், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் அவுட்டாகி நடையை கட்டினர். இதனால் அந்த அணி 50 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 6 புள்ளி 1 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

ஆட்டநாயகன் விருது முகமது சிராஜுக்கும், தொடர் நாயகன் விருது குல்தீப் யாதவ்வுக்கும் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் 8-வது முறையாக பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அசாருதீன், தோனிக்கு பிறகு, இரண்டு முறை கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com