விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கே.ஹேமராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கின் மனுவில்,
தென்பெண்ணை ஆற்றங்கரையில் 11 ஹெக்டேரில் மணல் குவாரி செயல்பட்டுவருவதாகவும், இந்த மணல் குவாரி செயல்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், விவசாயம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கருத்துக்கணிப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும், கிராம பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மணல் குவாரியை மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், மணல்குவாரியை மூட வேண்டும், மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 2 பொக்லைன்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பொக்லைன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக அள்ளப்பட்டு வருவதாக புகைப்பட ஆதாரங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி எம்.தண்டபாணி, ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி செயல்பட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வழக்கு குறித்து தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோர் 4 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
இதையும் படிக்க | சாத்தான்குளம் விவகாரம்: 3 மாதங்களில் முடிக்க உத்தரவு!