சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி அரியலூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்னா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இந்த நிகழ்வில் வருவாய் துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவையில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் துவங்கிய இந்த மாரத்தான், மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதியை அடைந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே போதை ஒழிப்பு தினத்தை ஒட்டி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். போதை பொருட்களை தடை செய்ய கோரி பொதுமக்கள் பதாகைகளுடன் ஊர்வலம் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவலர்கள் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.இருசக்கர வாகன பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
புதுச்சேரியில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி ஏரளமான மாணவ மாணவிகள் திரண்டு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் 100 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கையில் பாதாகைகளுடன் சென்று போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.