முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி,
"ஜெயலலிதாவை போலவே தனது பிறந்தநாளில் நேரில் பார்க்க வராமல் சேவை செய்யுமாறு கூறியிருந்தார் சசிகலா . தர்ம்போராட்டத்தை நடத்தி வருகிறார். மிக விரைவில் சசிகலா , தினகரன் தலைமையில் ஜெயலலிதா ஆட்சி அமையும். கொரோனா பாதிப்பு இல்லை என்றால் தமிழகமே சசிகலாவின் பிறந்தநாளுக்கு திரண்டு வந்திருக்கும் .
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக சசிகலா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் வி்ருப்பம் . உள்ளாட்சி தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை சசிகலா விரைவில் அறிவிப்பார்.
பழனிசாமி , பன்னீர் செல்வம் இருவருக்கும் கட்சி , சின்னத்தை கொடுத்தவர் சசிகலாதான். நியாயம் எப்போதும் மெதுவாகவே வெற்றி பெறும் . எடப்பாடி , ஓபிஎஸ் இருவரையும் கட்சிக்கு நாடித்துடிப்பாக இருக்கும் தொண்டர்கள் திருத்துவார்கள் . ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக தகுதி உள்ளவர் சசிகலாதான் .
ஜானகி எம்ஜிஆர் , போல கட்சி நலனுக்காக சசிகலா விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி , அவர் ஏன் விட்டுக் கொடுத்து செல்ல கூடாது. தானம் வாங்கிய பழனிசாமி , பன்னீர்செல்வம்தான் விட்டு கொடுக்க வேண்டும். தானம் கொடுத்த சசிகலா ஏன் விட்டு கொடுக்க வேண்டும்.
அதிமுக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் அதிமுக ஆட்சிதான் தற்போதும் இருந்திருக்கும். அந்தவகையில் ஸ்டாலின் முதல்வரானதற்கு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
கொடநாடு கொலை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருக்கிறது. சட்டம் தன் கடமையை செய்யும் " என்று கூறினார்.