அரசு சொத்துகளை கொள்ளையடித்ததற்காக...  7 ஆண்டுகள் சிறை!!

அரசு சொத்துகளை கொள்ளையடித்ததற்காக...  7 ஆண்டுகள் சிறை!!

அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை கொள்ளை அடித்த வழக்கில் தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட பத்தாண்டுகள் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விடுதலை படை என்னும் அமைப்பு செயல்பட்டு வந்தது.  அந்த அமைப்பினர், கடந்த 1997ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளை அடித்ததோடு தனி தமிழ்நாடு கோரிக்கை தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தையும் வீசி சென்றனர். 

க்யூ பிரிவு போலிசாரால் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையின் போது 3 பேர் உயிரிழந்தனர்.  மீதமுள்ள  11 பேருக்கு தலா பத்தாண்டுகள் சிறை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பளித்தது.  

தண்டனையை எதிர்த்து ஆறு பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த பத்தாண்டுகள் சிறை தண்டனையை ஏழாண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். 

காவல்துறையினரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்தை தாக்கவில்லை என்றாலும் கூட, துப்பாக்கி உள்ளிட்ட அரசு சொத்துகளை கொள்ளையடித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com