முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம், மூன்று வாரங்களில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் வேதா நிலையத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்தார். இதையடுத்து, வேதா நிலைய இல்லத்தின் சாவியை இன்று ஆட்சியர் விஜயா ராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்துள்ளார்.
சாவி ஒப்படைக்கப்பட்டதையடுத்து வேதா நிலையத்தில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தீபா.பின்னர் அனைவரும் பார்க்கும் வகையில் வீட்டின் மாடியில் கணவருடன் ஏறி நின்று தீபா உற்சாகமாக கையசைத்தார்.