"பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ்; அதிமுக பாஜக கூட்டணி கிடையாது" ஜெயக்குமார் திட்டவட்டம்!!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மதிக்கவில்ல. தனித்து செயல்படுகிறார். நான்கு பேர் சுற்றி நின்று கொண்டு, தலைவர் வாழ்க என கோஷமிட்டதும், அவருக்கு தலைக்கணம் ஏறிவிட்டது" என விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "அதிமுகவை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அவர்கள் எங்களுக்கு ஓவர் லக்கேஜ் அல்ல, வேஸ்ட் லக்கேஜ். அதிமுகவுடன், பாஜக கூட்டணி கிடையாது. இது என்னுடைய முடிவு அல்ல, கட்சியின் முடிவு. கட்சியின் முடிவையே நான் கூறுகிறேன். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்கு தான் பாதிப்பு. நோட்டாவை கூட தாண்ட முடியாது என விமர்சித்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகளை அண்ணாமலை பெறுவார்" என விமர்சித்துள்ளார்.

மேலும், "தன்மானம் உள்ள எந்த அதிமுக தொண்டனும், அண்ணாமலை பேசுவதை வேடிக்கை பார்க்கமாட்டான். பாஜக மேலிடத்திடம் கூறியும், அண்ணாமலை இப்படி பேசுகிறார் என்றால், மேலிடம் சொல்லித்தான் பேசுகிறார். அரசியல் தகுதி இல்லாதவர் அண்ணாமலை. அதிமுக என்பது சிங்க கூட்டம். அதை பார்த்து அண்ணாமலை என்னும் சிறுநரி ஊளையிடுகிறது. இனி அண்ணாமலையை, அதிமுகவினர் தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள்" எனவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்"

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com