”சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கருணாநிதி" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

”சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கருணாநிதி" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டில் சுமார் 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில் ஆயிரத்து 723 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினமான ஜூன் 27-ந் தேதி, அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா முதலமைச்சர் தலைமையில் ஜூன் 27 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. 

நிகழ்ச்சியில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மாணவ குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதேபோல், சிறந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான விருதுகளை வழங்கிய அவர், 3 சிட்கோ தொழிற்பேட்டைகளையும் தொடங்கி வைத்தார். 

பின்னர் பேசிய முதலமைச்சர், சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்றும் பெருமிதம் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் 127 தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வருவதாகவும், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ், புதிய தொழிற்சாலைகளுக்கு 35 விழுக்காடு மானியத்துடன் நிதி வழங்கப்படுவதாக கூறினார். பழங்குடி மக்களுக்கு தமிழகத்தில் மட்டுமே மானியங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

127 தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் 45 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், 6 புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என்றார். சென்னை, கோவை போன்ற தொழில் நகரங்களில் பணியாற்றும் வெளியூர் பணியாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் தங்கும் விடுதிகள் கட்டி கொடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழ்நாடு தொழில் புத்தாக்க திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மதுரை, ஈரோடு, நெல்லையை தொடர்ந்து, சேலம், தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பட்டியலின நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி, 30 கோடியில் இருந்து 50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறந்து விளங்கும் மாணவர் அணிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், புதிதாக தொடங்கப்பட உள்ள 3 சிட்கோ தொழில்பேட்டைகள் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com