கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்; செப்டம்பரில் திறப்பு!

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்; செப்டம்பரில் திறப்பு!
Published on
Updated on
1 min read

வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை செப்டம்பர் 2ம் வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடித்து 2022ல் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது..

இந்த பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள் மற்றும் 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் 99 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ள நிலையில் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளே அதிக அளவில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com