காங்கிரஸ் கட்சியை வழிநடத்த அவர் வருவார்-கே.எஸ்.அழகிரி!

காங்கிரஸ் கட்சியை வழிநடத்த அவர் வருவார்-கே.எஸ்.அழகிரி!

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி   இந்திய ஒற்றுமை நடைபயணம் என்கிற பெயரில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்தான ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பொருளாதார நிலை

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, இந்தியாவின் பொருளாதாரம் குறைந்து இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்து உள்ளது. கல்வியில் முன்னேற்றம் இல்லை. மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வெறுப்பு பிரச்சாரம் அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் இந்திய மக்களின் ஒற்றுமையை காக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைக்கான நடைபயணம் என்கிற நடைபயணம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் நடைபயணத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.

 இந்த நாட்டில் அரிசியையும் கோதுமையும் தான் ஏழைகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளார்கள். இது சர்வாதிகாரத்தனமானது. ஏழை எளிய மக்களை ஜி.எஸ்.டி மூலம் துன்புறுத்துகிறார்கள்.

புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு

பா.ஜ.க ஆட்சியில் தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மோடி கூறுகிறார். அது வரை மக்கள் இருக்க வேண்டும். இன்றை நிலையில் நாடு வளர்ந்துள்ளதா என்பது தான் முக்கியம். இன்றைய சூழலில் நம் பொருளாதார நிலை என்ன? மன்மோகன் சிங் ஆட்சியில் 9.2 சதவீதம் ஜி.டி.பி உயர்ந்தது. ஆனால் இன்று வெறும் 7 சதவீதம் தான் உயர்ந்துள்ளதாக கணக்கு காண்பிக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்று வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்களும் முக்கியம், தனியார் துறையும் முக்கியம் கலப்பு பொருளாதாரம் தான் நாட்டை உயர்த்தும். பா.ஜ.க ஆட்சியில் இலாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள்.

 காங்கிரஸை வழிநடத்துவார்

 காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே செல்லும் போது விஷத்தை கக்கி விட்டு தான் செல்வார்கள். அது போல குலாம் நபி ஆசாத்தும் பேசி உள்ளார். கட்சியில் முக்கிய பதவிகள் வகித்த அவர் கட்சியை குறித்து பேசாமல் இருப்பது தான் நல்லது.  மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாமலேயே காங்கிரஸை வழிநடத்தினார். அதுபோல ராகுல் காந்தியும் தேவைப்பட்டால் வருவார். தலைவர் தேர்தலுக்கும் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் நடைபயணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காங்கிரஸ் ஆதரவா?

 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பங்கேற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை என்பதை ஏற்று கொள்ள முடியாது.  துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஒரு இயக்கம் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் தான் ஆரோக்கியமான ஜனநயாகம். மாற்றங்கள் நிறைந்தது தான் ஜனநாயகம். இன்று காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. மீண்டும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

விவசாய காப்பீட்டுத் திட்டம் தோல்வி

 தமிழ்நாட்டில் தி.மு.க சிறப்பாக ஆட்சி நடத்துகிறது. ஒரு அரசு என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்கிறார்கள். ஆங்காங்கே இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டினால் அதை சரி செய்து கொள்கிறார்கள். மோடியின் விவசாய காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதி விவசாயிகள் மட்டுமே அதுவும் செல்வாக்கு உள்ள விவசாயிகள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். எனவே விவசாய காப்பீட்டு திட்டம் என்பது தோல்வி தான்.

 சென்னையில் எங்கு விமான நிலையம் வர வேண்டியது என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசு தான். விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது குறைந்தபட்சம் 20 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

 திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.