சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த 2 மாதங்களாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்சியாக நடைபெற்று வந்த நிலையில், அதில் பல்வேறு முக்கிய வழக்குகளின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
மேலும், ஜெர்மனிவாழ் தமிழ் பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நடிகர் ஆர்யா பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டதாகவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்போது அவரது பெயர் நீக்கப்படும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் நடிகர் ஆர்யா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோ கால் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதென அப்பெண்ணின் வழக்கறிஞர் கூறிய நிலையில், வழக்கறிஞரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் விநாயகர் சதுர்த்தியன்று அரசின் அறிவிப்பை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்தார்.