கிருஷ்ணகிரி ஜெகன் உயிரிழப்பு தொடர்பாக ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்...பதிலளித்த முதலமைச்சர்!

கிருஷ்ணகிரி ஜெகன் உயிரிழப்பு தொடர்பாக ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்...பதிலளித்த முதலமைச்சர்!

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து சமூகநீதியை பேணிக் காக்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஜெகன் படுகொலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கடந்த 20ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்ததினம் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்காக இன்று சட்டப்பேரவை கூடியதும், முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, உபயதுல்லா, சீனிவாசன், பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து நேரமில்லா நேரம் தொடங்கியதையடுத்து, காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு விபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தை காங்கிரஸ் எம்எம்ஏ செல்வப்பெருந்தகை கொண்டு வந்தார். இதையடுத்து கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்பவர், பெண் வீட்டாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அவசர கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் என்பவர் தனது காதலியை, பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டதாகக் கூறினார்.

இதுதொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து சமூகநீதியை பேணிக் காக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து முதலமைச்சர் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அமைச்சர்கள் உறங்கிக் கொண்டிருப்பதாக செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகை பிரச்னையை, எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தலின்பேரில் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com