தொலைதூர கல்வி மூலம் எல்.எல்.எம். படிப்பதில் பயனில்லையா? ஹைகோர்ட் அதிரடி!

எம்.எல். படிப்புகளை வழங்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவிற்கு தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு,அகில இந்திய பார் கவுன்சில் உள்ளிட்டவை  4 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைதூர கல்வி மூலம் எல்.எல்.எம். படிப்பதில் பயனில்லையா? ஹைகோர்ட் அதிரடி!

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்வி துறை சார்பில் முனைவர் படிப்புகளையும், எம்.எல். வகுப்புகளையும் நடத்தி வருவதாகவும், 2020-21ம் கல்வியாண்டில் 246 மாணவர்கள், எம்.எல். வகுப்புகளில் சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொலைதூர கல்வி மூலம் எல்.எல்.எம். படிப்புகளை முடித்தவர்களை, சட்டகல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக கருதக்கூடாது என இந்திய பார் கவுன்சில் 2012ல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளை ஆன்லைன் மூலமாகவோ, தொலைதூர கல்வி மூலமோ, தனி தேர்வர்களாகவோ பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழு தடை விதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,பல்கலைக்கழக மானியக் குழு, பார் கவுன்சில் விதிகளுக்கு முரணாக, சென்னை பல்கலைக்கழகம், சட்ட கல்வி தொடர்பான படிப்புகளை வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும்,2020-21ம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு,பல்கலைக்கழக மானியக்குழு,அகில இந்திய பார் கவுன்சில், சென்னை பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்..

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com