நிரம்பி வரும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள்...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகள் மழையால் வேகமாக நிரம்பி வருகின்றன.

நிரம்பி வரும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 303 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி ஆகும். இந்தாண்டில் ஏற்கனவே 2 முறை, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், ஒரே நாளில் 55 மில்லியன் கன அடி நீர் உயர்ந்து, 2 ஆயிரத்து 895 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 715 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், ஏரியின் நீர்மட்டம் 21 புள்ளி 15 அடியாக உயர்ந்துள்ளது.

கோடைக்கால தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் வரை, நீர் தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியின் மொத்த நீர் மட்டமான 21 புள்ளி 20 அடியில், தற்போது 19 புள்ளி 61 அடி நீர் நிரம்பியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில், தற்போது 2 ஆயிரத்து 934 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. மேலும், வினாடிக்கு 331 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 

மேலும், பூண்டி ஏரியின் நீர்மட்டமானது தற்போது 33 புள்ளி 15 அடியாக உள்ளது. முழு கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில், தற்போது நீர் இருப்பு 2 ஆயிரத்து 565 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும், ஏரிக்கு 765 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், விரைவில் நீர்மட்டம் 35 அடி என்ற மொத்த உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், சோழவரம் ஏரியின் மொத்த நீர் மட்டமான 18 புள்ளி 86 அடியில், தற்போது 14 புள்ளி 99 அடி நிரம்பியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கன அடியில், இன்று காலை நிலவரப்படி 674 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 339 கன அடியாக உள்ளது.

மேலும், கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த நீர் மட்டமான 36 புள்ளி 61 அடியில், தற்போது 35 புள்ளி 21 அடி நிரம்பியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில், தற்போது 458 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 35 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.  தொடர்ந்து 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கினால், ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயரும். இதனால் ஏரிகளில் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.