"தீபாவளியை முன்னிட்டு ஆவின் பால் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது" மனோ தங்கராஜ்!

தீபாவளி பண்டிகையொட்டி, ஆவின் பால் பொருள்கள் விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீபாவளி பண்டிகையொட்டி ஆவின் பொருட்கள் விற்பனை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விற்பனை அதிகமாக வந்துள்ளது. கடந்த ஆண்டு 115 கோடி ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 149 கோடி ரூபாய் விற்பனை ஆகி உள்ளது. மேலும் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது, 30 லட்சம் லிட்டர் ஆவின் கொள்முதல் செய்யப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "சென்னையில் தினந்தோறும் 14 லட்சத்து 86 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. கொழுப்பு சத்து அளவு பொறுத்து மூன்று விதமாக ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் கூட்டுறவு சங்கம் கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக செயல்படாத காரணத்தால் ஆவின் நிறுவனம் நலிவடைந்தது" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "ஆவின் பால் பாக்கெட் லீக்கேஜ் வேண்டுமென்று பரப்படும் பொய்யான செய்தி. பால் பேக்கிங் முறைகளில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. பால் கொள்முதலை  இந்திய தரநிலைகள் பணியகம் (பி.ஐ.எஸ்) தர நடைமுறைக்கு மாற்றும் நடைமுறை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் லிட்டருக்கு 80 காசு கூடுதலாக உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும். பால் பாக்கெட் எடை குறைவாக வழங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் உறுதியளித்துள்ளார்.

போக்குவரத்து நடைமுறைகளில் ஒரு பால் பாக்கெட்டுகளில் உடைசல் இருந்தால் அதனை மாற்றித்தரும் நடைமுறை ஆவினில் உள்ளது. ஒரு சில மொத்த விற்பனையாளர்கள் அதனை மறைப்பதாக புகார் வருகிறது. அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பால் விற்பனை விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என்றும்" அவர் கூறினார்.