கொரோனா பணிகளில் ஈடுபடுமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.! அமைச்சர் அன்பில்  மகேஷ் பேச்சு.! 

கொரோனா பணிகளில் ஈடுபடுமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.! அமைச்சர் அன்பில்  மகேஷ் பேச்சு.! 

திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "பிளஸ் 2 பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றும், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் நலமும் முக்கியம். என்றும், மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தே தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது என்றும் கூறினார். அதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், விருப்பமுள்ள ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபடலாம்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லோரும் சிபிஎஸ்சி பள்ளியை மனதில் வைத்துப் பேசினார்கள் என்றும்,  தமிழகம் மட்டுமே ஸ்டேட் போர்டு மாணவர்களையும் மனதில் வைத்து பேசியது என்றும், தேர்வு தேதியை மாநில அரசின் முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் மேலும் ஒரு பள்ளி மீது புகார் வந்துள்ளது என்றும், இது தொடர்பாக அந்த பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான புகார் குறித்து குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் விடமாட்டார் எனவும் கூறினார்.