"இணையதளம் வளர்ச்சி அடையும்போது அதற்கான பாதகங்களும் இருக்கும்" அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

இணையதளம் வளர்ச்சி அடையும் போது அதற்கான பாதகங்களும் இருக்கத்தான் செய்கிறது என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் எல்காட் நிறுவனம் சார்பில் அனிமேஷன் விசுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் கொள்கை வரைவு தயார் செய்வதற்கான கருத்தரங்கமும், இத்துறைகளில் உள்ள தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் பல்துறைகளில் இவற்றை பயன்படுத்துவது குறித்தான கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எல்காட் நிறுவன செயலாளர் குமர குருபரன் மற்றும் எல்காட் நிர்வாக இயக்குனர் கலந்து கொண்டனர்.

மேலும், அனிமேஷன் கேமிங் ஆகிய துறைகளில் தொழில் முனைவோர், நிறுவனம் நடத்தி வருபவர்கள், நிபுணர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

கருத்தரங்கத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், "ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில் புதிய தொழில்களில், புதிய துறைகளில் கவனம் செலுத்தி அதன் மூலம் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விஷுவல் எபெக்ட்ஸ் கேமிங் அனிமேஷன் துறையை கையில் எடுத்துள்ளோம். உலகளாவிய சந்தையில் இந்த துறையில் தேவை தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த துறை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த கருத்துகளை விவாதிக்கப்பட்டது.

மிகவும் குறுகிய உட்கட்டமைப்பு வசதிகளில் மனித ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி அதிகப்படியான உற்பத்தியை பெருக்கும் துறையாக இந்த துறை உள்ளது.  உலக அளவில் எங்கிருந்தும் உற்பத்தி செய்து எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்கிற வசதி உள்ளது.

இந்தத் துறை தொடர்பாக தமிழக அரசு கொள்கை ரீதியான வரைவு தயார் செய்வதற்கான கருத்தரங்கமாக இது நடைபெற்று வருகிறது இன்னும் இரண்டு மாதத்தில் இந்த வரைவை இறுதி செய்து முதலமைச்சரின் முன்னிலையில் சமர்ப்பிக்க இருக்கிறோம். பின்னர் இந்த துறையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் என்ன மாதிரியான வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் நிதி ஒதுக்கீடு மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக தெரிய வரும்.

எனவே இந்த வரைவு இறுதி செய்யப்படும் வரை நிறுவனங்கள் காத்திருக்காமல் ஏற்கனவே எல்காட் நிறுவனத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை பயன்படுத்திக்கொள்ள தொழில் முனைவோர்கள் நிறுவனங்கள் முன் வர வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம், இணையதளம் வளர்ச்சி அடையும் போது அதற்கான பாதகங்களும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது அனைவருமே செல்போனுக்கு அடிமையான வண்ணம் இருக்கிறார்கள். இது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனது வீட்டில் எனது குழந்தைகளுக்கு அதிக செல்போன் பயன்பாட்டிற்கு அனுமதி கிடையாது. அதேபோல சமூக வலைதளங்களும் அதிக அளவில் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பு கிடையாது. மேலும் தொழில்நுட்பம் வளரும் போது அதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் இணையதளத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்து பள்ளி மாணவர்கள் முதலில் சொல்லிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய சூழ்நிலையில்  இந்தியாவின் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது, சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையும் பொருளாதார அடர்த்தியும் கொண்ட நாடு இந்தியாவாக இருப்பதால் புதிய தொழில் முதல் முதலீடுகள் ஈர்ப்பதற்கான சூழ்நிலை உள்ளது. அதன்படி தகவல் தொழில்நுட்பத் துறை இதில் அதிக கவனம் பெறும் என கருதுகிறோம். பிற துறைகளில் இயந்திரங்கள் பயன்படுத்துவதன் மூலம் மனித உழைப்பு குறைந்துள்ளது. ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை மனித மூளையை பிரதானம். எனவே இந்த துறை வளரும் பொழுது தனிநபர் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்தத் துறையை பொருத்தவரை உலகளாவிய தேவை உள்ளதால் எந்த மாநிலங்களுடன் போட்டி போடாமல் தேவையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டால் போதும்" என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com