கோயில்களை திறப்பதில் பாரபட்சம் இல்லை... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்...

ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே கோயில்கள் மூடப்பட்டுள்ளது கோயில்களை திறப்பதில் பாரபட்சம் கிடையாது என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.
கோயில்களை திறப்பதில் பாரபட்சம் இல்லை... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்...

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுர ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆய்வு மேற்கொள்ள தனியார் குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை பெற்றதும் முடிவெடுக்கப்படும். இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்கள் ரூ.12 கோடி வாடகை செலுத்த வேண்டியுள்ளது ; அதனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கடந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1000 கோடி மதிப்பிற்கு மேலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவது உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு வருகிறது. மேலும், ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ள அதிகாரத்தின்படியும் அர்ச்சகர்களை நியமிக்க தக்கர்கள் மற்றும் இணை ஆணையர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. திருக்கோயில்களில் 2011-ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க இந்து சமய அறநிலையத்துறை தயார்.

கொரோனாவை கடுப்படுத்தவே வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளது. கோயில்களை திறப்பதில் பாரபட்சம் கிடையாது என்றும் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்து கோயில்கள் மட்டும் மூடப்பட்டுள்ளது என்ற தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் நேற்றிலிருந்து எளிதாக தரிசனம் செய்ததாக முகநூலில் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த முழுமையான இணையதளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயில்களில் நகைகளை தங்க கட்டிகளாக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, சமயபுரம் திருக்கோயிலில் மூட்டை மூட்டையாக காணிக்கை நகைகளை கட்டி வைத்திருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக நகைகளை கட்டி வைத்திருந்ததாக கூறினார்கள். இதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். பயன்பாட்டிற்கு இல்லாத, உடைந்த நகைகளை மட்டுமே உருக்க திட்டமிட்டுள்ளோம். மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை.1000 ஆண்டுகள் பழமையான நகைகள் அப்படியே உள்ளன என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் முன்னிலையில் நகைகளை கணக்கிடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

நகைகளை பிரித்து முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும். மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்திடம் அளித்து 24 கேரட் தங்க கட்டிகளாக பெறப்பட்டு, வைப்பு வங்கியில் வைத்து வட்டி தொகை பெரிய அளவில் கிடைக்கும் என கூறுகிறார்கள். இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையிலான திட்டமே தவிர,  மண்ணில் தூசி அளவு கூட இதில் தவறு நடக்காது என அய்யப்பன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். எனவே இதை யாரும் விமர்சிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com