ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டார்.
பின்னா் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்குரியது. நான் ஆளுநருக்கு சவால் விடுகிறேன் தூத்துக்குடிக்கு சென்று உங்களால் இந்த கருத்தை பேச முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று ஆளுநர் பேசியிருந்தது மாநில சுய ஆட்சிக்கு இழுக்கு என்றும் விமர்சித்துள்ளார்.
முன்னதாக, இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் உரையாடிய ஆர்.என்.ரவி, நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை ஸ்டெர்லைட் பூர்த்தி செய்ததாகவும், அதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டதாகவும் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.