"முன்பு நடந்த திமுக ஆட்சி வேற, இப்போ வேற... அதிகாரிங்க மாறிட்டு வர்றாய்ங்க" அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேச்சு!

"முன்பு நடந்த திமுக ஆட்சி வேற, இப்போ வேற... அதிகாரிங்க மாறிட்டு வர்றாய்ங்க" அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேச்சு!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் " இபிஎஸ்-ன் ஆட்சி அமைக்கும் எண்ணம் பலிக்காது " எனக் கூறியுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

ராமநாதபுரத்தில் வரும் 5ம் தேதி  நடைபெறும் திமுக  இளைஞரணி மாநாடு மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமயில்  நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய  அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிகாரிகள் இப்ப மாறிகிட்டு  வர்ராய்ங்க என ஒருமையில் பேசினார். இது அரசு அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரத்தில் தனியார் மகாலில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் " தென் மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் இந்த மாநாட்டை  நடத்தி இருக்கலாம். ஆனால் முதல்வர் மனதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதனால் நம் மாவட்டத்திற்கு இரண்டு பெரிய நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பளித்துள்ளார்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், " மாநாட்டிற்கு திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பேண்ட் சட்டை அணிந்து வரவேண்டும். வயதானவர்களுக்கு பேண்ட் சட்டை அணிந்து அழைத்து வர கூடாது. எத்தனை தேர்தல் வந்தாலும் திமுக ஆட்சி தான்,  முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் தொடர்வார்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "எடப்பாடி ஆட்சி அமைப்பது என்பது  நடகாத ஒன்று. அதிகாரிகள்  முன்பு போல இல்லை தற்போது மாறி கொண்டு வர்ராய்ங்க. முதலில் நடந்த திமுக ஆட்சி வேற தற்போது நடக்கும் திமுக ஆட்சி வேற முதல்வர் ஸ்டாலின் நியாயப்படி, தர்மத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் தான் ஆட்சி செய்கிறார்" எனப் பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com