ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் குறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட காவலர்கள் அனுமதிக்காததால் சுயேட்சை எம்.எல்.ஏ கேட் மீது ஏறி குதித்து சென்று முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் கலந்து கொண்ட விழாவில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை வசைபாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற முதல்வரின் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, தலைமை செயலாளர் அங்கு இல்லாததால் திரும்பி வந்தார். இந்நிலையில் கம்பன் கலையரங்கில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் தினவிழாவில் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்று இருப்பதாக தகவல் கிடைக்க அங்கே சென்றார் சுயேட்சை எம்.எல்.ஏ நேரு. ஆனால், வாயிற் கதவை மூடிய போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை, இதனையடுத்து 8 அடி உயரமுள்ள கேட் மீது ஏறி குதித்து அரங்கிற்குள் சென்ற எம்.எல்.ஏ மேடைக்கு கிழ் இருந்தே, மேடையில் அமர்ந்திருந்த தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுத்த நிதியை கொண்டு நகரை சுத்தம் செய்யாமல், சுற்றுச்சூழல் விழாவில் கலந்து என்ன பயன்? என கேள்வி எழுப்பியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் எந்த வேலையும் செய்யாமல் தலைமை செயலாளர் சம்பளம் வாங்குவதாக குறிப்பிட்டு அவர் மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை எனில் தலைமை செயலகத்தை தொடந்து முற்றுகை இடுவோம் என எச்சரித்தால். முதலமைச்சர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் அவருடன் மேடையில் இருந்த தலைமை செயலாளர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அரங்கமே பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து, ஆவேசப்பட்ட நேரு எம்.எல்.ஏ வை அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் சமாதானம் செய்து வெளியில் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க:ஆலந்தூரில் மின்வெட்டு: திமுக அதிமுகவினரிடையே மோதல்!