உலக பருவ நிலை மாநாடு... பிரதமர் மோடி இன்று உரை!

உலக பருவ நிலை மாநாடு... பிரதமர் மோடி இன்று உரை!

துபாயில் நடைபெறும் 28வது உலக பருவ நிலை உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். 

உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இந்த உச்சி மாநாடு வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது

இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டின் துணைப் பிரதமரும் ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சருமான ஷேக் சைப் பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார்.

தொடர்ந்து விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் பிரதமர் நரேந்திர மோடியை பாரம்பரிய முறையில் உற்சாகமாக வரவேற்றனர். கைகளில் இந்திய கொடியை ஏந்தியும், பாரம்பரிய நடனமாடியும் உற்சாகமாக வரவேற்றனர். 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், துபாயில் உள்ள இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பால் ஆழ்ந்து நெகிழ்ந்தேன் என்றும், அவர்களின் ஆதரவும் உற்சாகமும் நமது துடிப்பான கலாச்சாரம் மற்றும் வலுவான பிணைப்புகளுக்கு ஒரு சான்றாகும்" என்றும் பதிவிட்டுள்ளார்.