முத்துப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பு!

தமிழ்நாட்டில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு உட்பட பல இடங்களில் அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் சில தினங்களாக நடந்து வருகிறது.

முத்துப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பு!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசம்பாவிதச் சம்பவங்கள்

தமிழ்நாட்டில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு உட்பட பல இடங்களில் அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் சில தினங்களாக நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டது. இதில் திருவாரூர் காவல்துறையின் கூடுதல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, துணை கண்காணிப்பாளர். விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தீவிர சோதனை

அதேபோன்று முத்துப்பேட்டை நகர் எல்லையான பட்டுக்கோட்டை சாலையில் செம்படவன்காடு பைபாஸிலும், திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலங்காடு பைபாஸிலும், மன்னார்குடி சாலையில் கோவிலூர் பைபாஸிலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து நகர் பகுதிக்கு வரும் அனைத்து வாகனத்தையும் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர். இதில் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

வெளியூர் நபர்களிடம் விசாரணை

 அடையாளம் தெரியாத நபர்கள் வெளியூர் நபர்கள் வந்தால் தீவிர விசாரனைக்கு பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர். அதேபோல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார். முக்கிய பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதி, பல அமைப்புகளின் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் முத்துப்பேட்டை தற்போது பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.