தமிழ்நாட்டில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவராத்திரியையொட்டி சிதம்பரம் தெற்கு வீதியில் நாட்டியாஞ்சலி விழா மங்கள இசையுடன் தொடங்கி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள், நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று பரதம் உள்ளிட்ட பல்வேறு நடனங்களை ஆடி நாட்டிய அர்ப்பணம் செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று நாட்டிய விழாவை கண்டு ரசித்தனர்.
இதையும் படிக்க : குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் திடீர் ரத்து...!
அதேபோல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி 8-ம் ஆண்டு நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் சென்னை, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து வந்த நாட்டியப்பள்ளி மாணவிகள், இசைக்கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கும்பகோணம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியினை சென்னை கலாஸிந்து பரத நாட்டிய பள்ளியின் இயக்குனர் ஸிந்து சியாம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நாட்டிய கலைஞர்கள் குச்சிப்புடி, கதக்களி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவபெருமானை பூஜிக்கும் பாடல்களுடன் சிறுமியர்களின் பரதநாட்டியமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் ஏராளமான இசை ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை ரசித்தனர்.