"பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை" - கே.பி. முனுசாமி திட்டவட்டம்

இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கே.பி. முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

“இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வை மதிக்கும் வகையில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தோம். நேரம் வரும்போது அதிமுக பாஜக கூட்டணி அமையும் என ஒரு சிலர் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக நாடகமாடுகிறது என்று தெரிவித்துள்ளனர். இது அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தின் வெளிப்பாடு என்று நாங்கள் கூறுவோம்.”  என்றார்.

அதனைத்தொடர்ந்து,  “நாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் இருந்து ஒரு போதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம்”, என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக என்பது மிகப் பெரிய இயக்கம் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த இயக்கம் பல வரலாறுகளைக் கொண்ட இயக்கமாக அதிமுக உள்ளது  எனவும், வேறொரு கட்சியில் உள்ள மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூறும் அளவிற்கு நாகரிகம் தெரியாதவர்கள் அல்ல அதிமுகவின் தலைவர்கள் என்றும் தெரிவித்தார்.

அண்ணா உருவாக்கிய கொள்கைகளை வேறொரு தலைவர் விமர்சனம் செய்கிறார் அதை பற்றி கவலைப்படாமல் இருக்கும் முதலமைச்சர் கொள்கை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.  இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது.  நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இருக்காது”, என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் பாஜக செய்யத் தவறியதை மக்களிடையே நாங்கள் சுட்டிக் காட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

பாஜக கூட்டணி குறித்து பொதுச்செயலாளரின் உணர்வையே நாங்கள் வெளிப்படுத்தி உள்ளோம் அவர் பேச வேண்டிய நேரம் வரும்போது தன்னுடைய கருத்தை தெரிவிப்பார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவுக்கு வந்து விடுமோ என்று ஸ்டாலின் அஞ்சுகிறார்”. என கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com