தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மா.சுப்ரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது என்று கூறினார். மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவித்த அவர், மின்தடை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொத்தாம்பொதுவாக புகார்களை பதிவிடக் கூடாது என்றும், மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்ததால் துறையின் சார்பில் ஆய்வு செய்யப்படுவதாகவும், இதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.