வீரம் என்றால் விவேகனந்தர்...வள்ளலார் போன்றவர்கள் என்ன கோலிகுண்டு விளையாடிக் கொண்டிருந்தார்களா...? சீமான் கேள்வி

வீரம் என்றால் விவேகனந்தர்...வள்ளலார் போன்றவர்கள் என்ன கோலிகுண்டு விளையாடிக் கொண்டிருந்தார்களா...? சீமான் கேள்வி

சென்னை சின்னப்போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மறைந்த வேலுநாச்சியாரின் 226 - வது நினைவு தினம் மற்றும் கீழ் வெண்மணியில் உயிர் நீத்தவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  மரியாதை செலுத்தினர். 

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சத்தித்த சீமான், நீண்ட நெடிய வரலாற்று பெருமை கொண்டு, இனத்தின் வரலாறாக வாழ்ந்து மறைந்தவர் வேலு நாச்சியார். புரட்சி பெண் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தார்களோ அது போல வாழ்ந்தவர். கணவன் உடல் மீது உறுதியேற்று, இழந்த நிலத்தை மீட்பேன் என போராடி நிலத்தை மீட்ட வீர பெண். கண்ணகி காப்பிய நாயகி, காப்பியங்களில் சில கற்பனை சேர்க்கப்படும். ஆனால் வரலாற்றை மாற்ற முடியாது. கண்ணகியை விட ஆகச் சிறந்தவர் வேலுநாச்சியார். கண்ணகி போல வேலுநாச்சியாருக்கு கோயில் கட்டியிருக்க வேண்டும். இழந்தை நிலத்தை மீட்ட இருவர் வேலுநாச்சியார், தலைவர் பிரபாகரன் தான். 8 நாட்கள் போரிட்ட சிவாஜி வீரர் என்றால், 80 நாட்கள் போரிட்ட மருது சகோதரர்கள் வீரர்கள் இல்லையா. வட இந்தியர்களை மட்டுமே கொண்டாடி வருகின்றனர். வீரம் என்றால் விவேகானந்தரை தான் வழிபடுவார்கள். வள்ளலார் போன்றவர்கள் என்ன கோலிகுண்டு விளையாடிக் கொண்டிருந்தார்களா என கேள்வி எழுப்பினார்.

கீழ்வெண்மணி போன்று மற்றொரு நிகழ்வு இனி நடைபெறாமல் அரசு பாதுகாக்க வேண்டும் என கூறினார். ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, கருத்தியல் மூலம் தான் மாற்றம் கொண்டுவர முடியும், நடந்து சென்று என்ன பயன். பாஜக காங்கிரஸ் இரண்டும் ஒன்று தான். காங்கிரஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதனை வளர்த்தது பாஜக. அதனால் எதையும் பேசமுடியாமல் ராகுல் நடந்து செல்கிறார். நடந்து சென்று புரட்சி செய்துவிட முடியும் என்றால் 2016 ல் நமக்கு நாமே ஸ்டாலின் புரட்சி செய்திருப்பார். இதற்கான இயக்குனர் ஒருவர் உள்ளார். மதிப்புமிகு யாராக இருந்தாலும் நடக்க வைத்து விடுவார் எனவும், பூங்காவில், கடற்கரையில் நடக்க வேண்டாம், தெருவில் நடக்கவிடுவார். பாஜக காங்கிரசை பார்த்து பயப்படுகிறது என்று தெரியவில்லை, தமிழகத்தில் என்னை பார்த்து தான் இரு கட்சிகளும் பயப்படுகிறது என சீமான் தெரிவித்தார். 

நடிகர் விஜய் வாரிசு பாடல் வெளியீட்டு விழாவில், எனக்கு போட்டியாளர் நான் தான் என தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட போது, பந்துவிளையாட யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது, பந்தை தானே சுவற்றில் அடித்து விளையாடிக்கொள்ள வேண்டியது தான். கோபம் வந்தால் கண்ணாடி முன் திட்டிக்கொள்வது போல என கூறி நடித்து காண்பித்தார். மேலும், உதயநிதி போன்று வேறு யாரையாவது போட்டி என்று சொன்னால் என்ன நடக்கும் என்பது விஜய்க்கு தெரியும். அதனால், விஜய் பாதுகப்பாக விளையாடுகிறார். இதன் மூலம் விஜயின்  முதிர்ச்சியை பாராட்டுகிறேன் என கூறினார். 

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லை, எதற்கு விமான நிலையம். எதிர்கட்சியாக இருக்கும் போது பேசியது வேற வாய். ஆட்சியில் பேசுவது வேறு வாய். இதுபோல பல விசயங்களில் மாற்றி நடந்து கொண்டதுண்டு என கூறினார்.

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு தமிழகத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்துள்ளனர். அவர்கள் அரசை நம்பி தான் பயிரிட்டனர். அரிசி இங்கு இல்லையா, பஞ்சாப்பில் இருந்து தான் வாங்க வேண்டுமா. கமிசன் அடிக்கவே இது போன்று செயல்படுகின்றனர். மதுபானங்களை பாதுகாக்க கிடங்குகள் உள்ளது. அரிசியை பாதுகாக்க கிடங்குகள் உள்ளதா என கேள்வி எழுப்பினார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com