சென்னை செம்மொழி பூங்காவில் ஜூன் 3 முதல் 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடத்தப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மலர் கண்காட்சி தொடங்க உள்ளது, அதற்கான பணிகள் இன்று மும்மரமாக நடைபெற்று வருகிறது..
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன்படி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் ஜூன் 3 மலர் கண்காட்சி நடத்த தோட்டக் கலைத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. செம்மொழி பூங்காவில் ஜூன் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
பெங்களூர், உதகை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம் எனவும் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூபாய் 20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூபாய் 50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும், கேமராவுக்கு ரூ.50, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
செம்மொழி பூங்காவில், கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இரண்டாவது மலர் கண்காட்சி, வரும் ஜூன் 3 முதல் 5ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. செம்மொழி பூங்காவில், அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், வெயிலின் கடுமையான தாக்கம் காரணமாக பள்ளிகள் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கோடை விடுமுறை மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவதால் பள்ளி மாணவ- மாணவிகள் கண்காட்சிக்கு செல்ல நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.
இதையும் படிக்க | கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...!