எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஓ.பி.எஸ்

அதிமுக பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களால் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பொதுக்குழு ஜூலை 11 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஓ.பி.எஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழுவில் உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர் தொடுத்துள்ளார்.

கடந்த 23 அம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது.அதற்கு முன்தினம் பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின்பு அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என்றும், ஆனால் 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக் கூடாது என தீர்ப்பளித்திருந்தனர்.

அதிமுக பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களால் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பொதுக்குழு ஜூலை 11 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதாவது, உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை அதிமுக பொதுக்குழு நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நியமனம், ஜூலை 11-ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com