பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த பள்ளியில் அளிக்கப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகள் பற்றிய ஆதாரங்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.
சென்னை கே.கே.நகரில் செயல்பட்டுவரும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராஜகோபாலனிடம் போலீசார் விடிய விடிய நடத்திய விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. மேலும், பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாக ராஜகோபாலன் கூறியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து எந்தெந்த செல்போன் அப்ளிகேஷன் வழியாக ஆன்லைன் வகுப்புகள் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடத்தப்பட்டன என்ற விவரங்களும், பள்ளிகளின் சார்பில் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிப்பவர் யார் கடந்து ஓர் ஆண்டுகளாக அந்த அப்ளிகேஷனில் உள்ள ஹிஸ்டரி (சாட் மற்றும் வீடியோக்கள்) ஆகியவற்றை பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திலிருந்து போலீசார் பெற்று வருகின்றனர்.