சூர்யா, தாமரை போன்ற ஆட்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள்...பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆவேசம்!!

சூர்யா, தாமரை போன்ற ஆட்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம. ஸ்ரீநிவாசன்.
சூர்யா, தாமரை போன்ற ஆட்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள்...பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆவேசம்!!
Published on
Updated on
2 min read
நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா மற்றும் பாடலாசிரியர் கவிஞர் தாமரை ஆகியோர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம. ஸ்ரீநிவாசன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் அவசியம், சமுதாயத்தில் போட்டியே இல்லை என்கின்ற சூழல் இருக்கும் போது இதுபோன்ற தேர்வுகள் தேவைகள் இருக்காது.
ஆனால் எப்போது வாழ்க்கை சூழல் போட்டியிடுவதாக மாறி விடுகிறதோ.! அப்போது நுழைவுத் தேர்வுகளும், தகுதி தேர்வுகளும், போட்டித் தேர்வுகளும் தேவைதான். இதற்கு முன் எந்த மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள் என ஒரு பெண் கவிஞர் கேட்டுள்ளார். இதற்கு முன் எந்த ஆசிரியர்கள் நுழைவுத் தேர்வு எழுதினார்கள், தகுதி தேர்வு எழுதினர் அப்படியானால் தமிழக அரசு ஏன் தகுதிதேர்வு வைக்கின்றது. ஆசிரியர் படிப்பு படித்த ஆசிரியர்களின் மதிப்பெண்களை வைத்து பணியில் அமர்த்தலாம், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எதற்காக அரசாங்கம் நடத்த வேண்டும். அதுபோன்று கல்விக்கும் நுழைவுத்தேர்வு தேவை.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் 12ம் வகுப்பு தேர்வுகளில் ஒவ்வொரு விதமான மதிப்பெண்களை கொடுக்கிறார்கள். தமிழகம் உட்பட பல இடங்களில் 12ம் வகுப்பு தேர்வுகளில் சில மாணவர்கள் பிட் அடித்து பாஸ் செய்வது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பேப்பரை சேஸ் கூட செய்வது, எங்கே பரீட்சை பேப்பர் திருத்த படுகிறதோ அந்த இடத்தில் அதிக மார்க் போட ஏற்பாடு செய்வது போன்ற முறைகேடுகள் இதற்கு முன் நடைபெற்றது.
இது போன்ற முறைகேடுகளை தாண்டி நல்ல மருத்துவரை உருவாக்க வேண்டுமென்றால் நீட் தேர்வு அவசியம். அனைத்து மாநிலங்களில் இருக்கும் மருத்துவ இட ஒதுக்கீட்டில் 15 சதவீதம் அகில இந்திய கோட்டா அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 85% அந்தந்த மாநிலங்கள் சார்பாக நிரப்பப்படுகிறது, தமிழக மாணவர்கள் அதிகபட்சமாக நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் போது பிற மாநிலங்களில் உள்ள 15 சதவீத இட ஒதுக்கீடு தமிழக மாணவர்களும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம். இதனால் தமிழன் வாழவேண்டும் என்கிற சூழல் மாறி தமிழன் இந்தியா முழுவதும் ஆள வேண்டும் என்கிற நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் இழக்க வேண்டுமா.? தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலம் என பெண் கவிஞர் கூறியுள்ளார், ஆனால் கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் கூட நீட் தேர்வை எதிர்கொள்ளும் போது, தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்.? திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் அமைச்சர் நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறுகிறார்.
நிதியமைச்சர் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றி கேள்வி எழுப்பியதற்கு தேதி குறிப்பிட்டோமா என கேள்வி என பதிலளிக்கிறார். அப்படியானால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கும் தேதி குறிப்பிடவில்லை. இதுதான் திமுக. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், 1975இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கல்வியை மாநில அரசு பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு அப்போது இருந்த பிரதமர் இந்திரா காந்தி மாற்றினார்.
அப்போது கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தாரா.? வழக்கு தொடுத்தாரா.? பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டாரா.? இல்லை இந்திரா காந்தி தமிழகம் வரும்போது எதிர்ப்பு தெரிவித்தாரா.? மாற்றாக நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என வரவேற்றார். இதே போன்று இதற்குமுன் மத்தியில் 15 வருடம் ஆட்சியில் பங்கு வகித்த திமுக கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில அரசுக்கு மாற்ற வேண்டும் என குரல் கொடுத்தார்களா.? இதுகுறித்து நடிகர் சூர்யா வாய் திறக்காமல் கள்ள மௌனம் காப்பது ஏன்?
மேலும், நீட் தேர்வு வருவதற்கு முன்பு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் வருடத்திற்கு 19 பேர் மட்டுமே மருத்துவ படிப்புக்கு சென்றுள்ளார்கள், அப்படியானால் நீட் தேர்வு வந்த பின்புதான் அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதாக சூர்யா கூறுவதக்கு அவரிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது.? நீட் தேர்வுக்கு முன் 19 வருடங்களில் 349 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கு சென்றுள்ளார்கள் என சுட்டிக்காட்டி நீட் தேர்வு அவசியம் பற்றி பாஜக மாநில பொதுச் செயளாலர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com