சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள, உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 2-ம் நாள் சதூர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமி வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ம் நாள் விழாவை முன்னிட்டு கோயில் திருநாள் மண்டபத்தில் உற்சவரான ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளி சிம்ம வாகனத்திலும், ஸ்ரீசண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
உற்சவர்களுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர தீபம், கும்ப தீபம், நட்சத்திர தீபம் உள்ளிட்ட ஏராளமான தீபங்களால் ஆராதனை செய்யப்பட்டு, ஷோடச உபசாரங்கள் நடைபெற்றது. பின்னர் உதிரி பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து மகா பன்முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. நிறைவாக வேத மந்திரங்கள், திருவாசகம் பாடல்கள் பாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருவிய பகவானை பக்தர்கள் தோளில் சுமந்து கோயிலின் வெளிப்பிரகாரத்தை வலம் வரச் செய்தனர். மங்கள வாத்தியங்களுடன் மின்னொளியில் பவனி வந்த உற்சவர்களை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவின் 6ம் நாள் மாலை கஜமுக சூரசம்காரமும். 9ம் நாள் மாலை திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
விழாவின் 10ம் நாள் காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை, காரைக்குடி சாமிநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க || மறக்குமா நெஞ்சம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கும் யுவன்!!