சென்னை மதுரவாயில் புறவழிச்சாலை அருகே துப்பாக்கி முனையில் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மிரட்டி பணம் பறிப்பு:
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரைச் சேர்ந்த விவேக் என்பவர் மீது மூன்று கொலைகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியாக வலம் வந்த விவேக், தனது நண்பர் விக்னேஷுடன் சேர்ந்து மாந்தோப்பு பகுதியில் உள்ள தள்ளுவண்டி காரரை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
துப்பாக்கி முனையில் பிடித்த போலீசார்:
ஏற்கனவே ரவுடி விவேக், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், மதுரவாயில் புறவழிச்சாலையில் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது விவேக்கின் நண்பர் விக்னேஷை துப்பாக்கி முனையில் போலீசார் பிடித்தனர். அதேசமயம், பட்டாகத்தியை காட்டி மிரட்டிய ரவுடி விவேக், போலீசுக்கு பயந்து தப்பியோட முயன்றபோது பாலத்திலிருந்து தவறி விழுந்தார்.
கொலை செய்ய திட்டம்:
இதில் வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவரை மீட்ட போலீசார் குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், விவேக், தாம்பரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.