சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டையில் ஆசிரியர் நகர் உள்ளது. இந்த நகரில் சுந்தர்ராஜன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று தனது மனைவி ரமணியுடன் கும்பகோணம் கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் எதிர் வீட்டில் வசிப்பவர்கள் சுந்தர்ராஜனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
தகவலை கேட்டத்தும் அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜன் வீட்டிற்கு விரைந்துள்ளார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள், ரூ 40 பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் நகர் பகுதியில் தெரு முனையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த கேமரா பதிவில், வடமாநில இளைஞர் ஒருவர் வருவதும், பின்னர் அவர் கொள்ளை நடந்த சுந்தர்ராஜனின் வீட்டின் சுவர் ஏறி குறிப்பதும், அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.
சிசிடிவி கேமிராவை கைப்பற்றிய போலீசார், நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுந்தரராஜனின் வீட்டில் திருடிய கொள்ளை கும்பல் அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் புகுந்து 5 கிராம் நகையை கொள்ளையடித்ததும், அருகில் உள்ள மற்ற இரண்டு வீடுகளில் திருட முயன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வடமாநில கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.