”இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்தும் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள்” அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

”இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்தும் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள்” அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

இசையமைப்பாளர் இளையஞராஜாவின் பிறந்தநாளை ஒட்டி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

இசையின் இன்றியமையாத இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா, இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா என புகழாரம் சூட்டியுள்ளார். அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி! அதனால் தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் ரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அத்தோடு, எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் ராஜாதான்! என்றும் தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் வாழ்த்து கூறியுள்ளார். 

இதேபோல, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில், திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக் கொண்டிருப்பதாகவும், இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர் என புகழாரம் சூட்டியுள்ளார். 

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இசைஞானி இன்று பல கோடி மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தும் இசை மருத்துவராக, நம் தேசத்தின் அடையாளங்களில் ஒருவராக விளங்குவதில் நம் அனைவருக்கும் பெருமையே எனவும்,  இசைஞானி நீண்ட ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் இசையால் இந்த உலகை ஆள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com