ஈஷா மகாசிவாரத்திரி: தமிழ்நாட்டிற்கு வருகை தரும் குடியரசு தலைவர்...!

ஈஷா மகாசிவாரத்திரி: தமிழ்நாட்டிற்கு வருகை தரும் குடியரசு தலைவர்...!

மகா சிவராத்திாியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்திற்கு இன்று குடியரசு தலைவா் திரவுபதி முா்மு வருகை தருவதையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு வருகிறாா். அதன்படி இன்று காலை 11 மணி அளவில் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர், முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக டிரோன்கள் பறப்பதற்குத் தடை விதித்துள்ள காவல்துறையினர், விடுதிகள் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையைத் தொடர்ந்து கோவை ஈஷா மையத்தில் இன்று நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கோவை விமான நிலையத்திலும், ஈஷா யோகா மையத்திலும் நேற்று எஸ்பிஜி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 

இந்த நிலையில், குடியரசு தலைவா் வருகையையொட்டி ஈஷா மையத்தில் தியானலிங்க தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை தியானலிங்கம், லிங்கபைரவி, சூர்ய குண்டம், சந்திர குண்டம் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, ஈஷா மைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com